|
ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் நாடோடிகளாக திரியும் வேட்டை கும்பலால், எஞ்சியுள்ள புலிகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும், 20ம் நூற்றாண்டில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் இருந்தன. கடந்த, 1972, நவம்பர் 18ல், புலியை தேசிய விலங்காக மத்திய அரசு அறிவித்தது. 1973ன் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை, 1,800 ஆக குறைந்ததால், "புராஜக்ட் டைகர்' என்ற திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்தியா முழுவதும் உள்ள, 1,706 புலிகளில், தமிழகத்தில் மட்டும், 292 புலிகள் உள்ளன. புலிகளை காக்கும் நோக்கில், அதிக புலிகள் உள்ள வனப்பகுதியை, காப்பகமாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில், நெல்லை மாவட்டத்தில் களக்காடு முண்டந்துறை, கோவை மாவட்டத்தில், ஆனைமலை, நீலகிரியில் முதுமலையும், புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் மட்டும், 2010-11ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 163 புலிகள் உள்ளது. சில மாதத்துக்கு முன், பலத்த எதிர்ப்புக்கு இடையே, சத்தியமங்கலம் வனப்பகுதியை, புலிகள் காப்பகமாக அரசு அறிவித்தது. சத்தியமங்கலத்தில், 26க்கும் மேற்பட்ட புலிகள் இருப்பதாக, வனத்துறையினர் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் நாடோடி கும்பல் போல், திரியும் வேட்டை கும்பல் புலிகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து, பசுமை இயக்க மாநில இணை செயலாளர் ஜெயச்சந்திரன் கூறியதாவது: டில்லியில் இருந்து சன்சார்சந்த் என்ற வேட்டை கும்பலை சேர்ந்த ஒருவனால், இந்தியாவில் இருந்து, நேபாளம், திபெத் பகுதிக்கு புலித்தோல் கடத்தப்படுகிறது. புலிகளை வேட்டையாட, மத்திய பிரதேசத்தை சேர்ந்த கட்னி இனத்தை சேர்ந்த மலைவாழ் மக்களை, சன்சார்சந்த் பயன்படுத்தி வந்தான். மருந்து விற்பதை போலவும், மருந்துக்கான செடி, கொடிகளை சேகரிப்பதை போலவும், வனத்துக்குள் நுழையும் நாடோடி கும்பல், புலிகள் நடமாடும் பகுதியில், கால் கிடுக்கியை வைத்து செல்கிறது. அவ்வழியே வரும் புலிகளின் கால்களை, கவ்விப்பிடித்து நசுக்கி, முடமாக்கும். உடனே வேட்டை கும்பல், துப்பாக்கி, வில், அம்பு ஆகியவற்றை பயன்படுத்தி, புலிகளை வேட்டையாடுகின்றன. நாடோடி கும்பல் வனத்துறையிடம் சிக்கினால், அவர்களை பெயிலில் எடுக்க, மும்பையை சேர்ந்த வக்கீல் வருகிறார். சில நாட்களுக்கு முன், சத்தியமங்கலத்தில் சுற்றித்திரிந்த ஹைடெக் நாடோடிகளை, எங்கள் ஒத்துழைப்புடன், வனத்துறையினர் விரட்டி அடித்தனர். அவர்களிடம், டிஷ் ஆன்டனா, "டிவி' என பல்வேறு சாதனங்கள் இருந்தது. அவர்களிடம் இருந்த ஒரு டப்பாவில் கூட, மூலிகை மருந்தோ, அதற்கான அடையாளமோ இல்லை. மேற்கு தொடர்ச்சி மலைகளில், புலிகள் நடமாட்டம் உள்ள பகுதிகள் முழுவதும், நாடோடி கும்பல் அலைகிறது. வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இதுகுறித்து மண்டல வனப்பாதுகாவலர் வெங்கடேஷ் கூறியதாவது: வெளி மாநிலங்களில் இருந்து வரும் நாடோடிகள், புலிகள் வேட்டையில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, தமிழக-கர்நாடக எல்லைகளில், வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சத்தியமங்கலம் வனப்பகுதி முழுவதையும் சோதனை செய்ய, வன சிப்பந்திகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுவரை, வேட்டை கும்பல் தென்படவில்லை, என்றார்.
|