|
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் கொங்கு வேளாளர் பொறியியல் கல்வி அறக்கட்டளை சார்பில் கொங்கு பொறியியல் கல்லூரியில் பத்மஸ்ரீ விருது பெற்ற எஸ்.கே.எம்.மயிலானந்தனுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு அவர் பேசியது: ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்றோருக்கு பிள்ளைகள் தான் விலை மதிக்க முடியாத சொத்து. அவர்கள் வீட்டுக்கு மட்டுமின்றி, நாட்டுக்கும் மிக முக்கியமான சொத்து. மாணவ, மாணவிகளை நல்ல மனிதர்களாக உருவாக்குபவை கல்விக்கூடங்கள்தான்.
புண்ணிய பூமி, ஆன்மிக பூமி என வெளிநாட்டு சிந்தனையாளர்களால் அழைக்கப்பட்ட நம் நாட்டில், அண்மைக் காலமாக நடைபெற்றுவரும் சில சம்பவங்கள் மனதை நெருடுகின்றன. பெரிய ஊழல்கள் வரும்போது, சிறிய ஊழல்கள் மறைந்துவிடுகின்றன. ஊழல் நாடாக இந்தியா மாறி வருவதை பார்க்கும்போது வேதனை ஏற்படுகிறது.
அறிவுத்திறன், ஒழுக்கம், நல்ல பண்பாடு, நெறிகள் இருந்தால்தான் வாழ்வில் வெற்றி பெற முடியும். எந்த விலங்கும் தனது இனத்தை அழிக்காது; ஆனால் மனிதன் மட்டும்தான் அரசியல், சாதி, பணம் உள்ளிட்டவைகளுக்காக தனது இனத்தையே அழிக்கிறான். சமுதாயத்தில் இருந்து எவ்வளவு பெற்றுக்கொண்டோமோ அதே அளவு சமுதாயத்துக்கு திருப்பிச் செலுத்த வேண்டும்.
எனது நாற்பது வயதில் சேலத்தில் நடைபெற்ற ஆன்மிக மாநாட்டில் பங்கேற்றேன். அப்போது அங்கு பேசப்பட்ட கருத்து எனது மனதை மிகவும் பாதித்ததுடன், சிந்திக்க வைத்தது. சமுதாயத்தில் இருந்து பெற்றதில் 50 சதவீதத்தை திருப்பிச் செலுத்துபவன் மனிதன். 100 சதவீதத்தை செலுத்துபவன் மிகச்சிறந்த மனிதன். எதையுமே திருப்பிச் செலுத்தாதவன் திருடன் என்பது தான் அந்த கருத்து. இந்த கருத்து தான் எனது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியது. கடமையை சேவையாக கருதி செய்ய வேண்டும். படிக்கும்போதே தியானம் செய்ய மாணவ, மாணவிகள் கற்றுக்கொள்ள வேண்டும். அன்போடு வாழ்வது தான் உண்மையான ஆன்மிகம் என்றார்.
விழாவில் கல்லூரி தாளாளர்கள் ஆர்.கே.விஸ்வநாதன் (கொங்கு பொறியியல் கல்லூரி), ஏ.வெங்கடாசலம் (கலை அறிவியல் கல்லூரி), ஏ.கே.இளங்கோ (பாலிடெக்னிக்), ஆர்.எம்.தேவராஜா (மெட்ரிக் பள்ளி), பொறியியல் கல்லூரி முதல்வர் ஆர்.குப்புசாமி, அறக்கட்டளை உறுப்பினர்கள் வி.கே.முத்துசாமி, எம்.என்.ராமசாமி, பி.சி.பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
|