|
ஈரோடு: மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டம் - 2ல் உள்கட்டமைப்பு பணிகள் முடிந்த நிலையில், குப்பைகளை களத்தில் கொட்டி, பிரித்து, உரம் தயாரிக்கும் பணிகள் துவங்காததால், தொடர்ந்து காவிரி ஆற்றினுள் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். ஈரோடு மாநகராட்சி, 109.52 சதுர கி.மீ., பரப்பளவும், ஒரு லட்சத்து, இரண்டு ஆயிரம் குடியிருப்புகள், ஐந்து லட்சம் மக்கள் தொகையை கொண்டுள்ளது. மாநகராட்சியில் நாளொன்றுக்கு, 300 டன் குப்பை கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. வெண்டிபாளையம் குப்பை கிடங்கிலும், வைராபாளையம் காவிரி ஆற்றங்கரையில், பத்தாண்டுகளுக்கு மேலாக கொட்டி வருகின்றனர். வெண்டிபாளையம் குப்பை கிடங்கில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பை கழிவில் இருந்து, தினமும், 150 டன் உரம் தயாரிக்கின்றனர். வீரப்பன்சத்திரம் நகராட்சியாக இருந்தபோது, வைராபாளையம் காவிரிக்கரை பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் துவங்க திட்டமிட்டு பணிகள், பாதி முடித்த நிலையில் கிடப்பில் போடப்பட்டது. மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண் திட்டம் - 2ஐ வைராபாளையம் பகுதியில் துவங்கி திட்டமிட்டனர். கடந்தாண்டு மே மாதம் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்கம், 2011 - 12 ம் ஆண்டிற்கான, 2.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கப்பட்டது. உள்கட்டமைப்பு பணிகள் முடிந்த நிலையில், உரம் தயாரிப்பதற்கான இயந்திரங்கள், அதற்கான குடோன்கள் அமைக்கும் பணிகள் துவங்கவில்லை. இதனால், இன்று வரையிலும் காவிரி ஆற்றின் கரையில் ஆற்றினுள் குப்பையை கொட்டி வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது: திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பை கழிவில் இருந்து உரம் தயாரிக்கும் பணி வெண்டிபாளையத்தில் நடந்து வருகிறது. இரண்டாம் திட்டம் வைராபாளையத்தில் ஏற்படுத்தியுள்ளோம். உள்கட்டமைப்பு பணிகள் முடிந்துவிட்டன. கடந்த ஒன்றரை ஆண்டாக மழையில்லாததால் விவசாயத்துக்கான உரங்கள் விற்பனை குறைந்து போயின. திடக்கழிவு மூலம் தயாரிக்கப்படும் உரங்களை கொள்முதல் செய்யும் வடமாநில உரம் தயாரிப்பு நிறுவனங்கள் ஸ்டாக் வைக்க உத்தரவிட்டதால், உற்பத்தி செய்த உரங்கள் குடோன்களில் உள்ளன. இதனால் இரண்டாம் திட்டத்தை துவங்க, நிறுவனம் தாமதப்படுத்தி வருகிறது. விரைவில் தளத்தில் குப்பை கொட்டி, பிரித்து உரம் தயாரிப்பதற்கான பணிகள் துவங்கும், எனக்கூறினார்.
|