|
சென்னை: சென்னையில் இன்று நடக்கும் பிரிமியர் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் சென்னை, டில்லி அணிகள் மோதுகின்றன. கடந்த போட்டியில் ராஜஸ்தானிடம் படுதோல்வி அடைந்த சென்னை அணி, இம்முறை சாதித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. "பிளே-ஆப்' வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்து விட்ட, சென்னை அணிக்கு மைக்கேல் ஹசி, முரளி விஜய் சேர்ந்து மீண்டும் நல்ல துவக்கம் தர வேண்டும். ரெய்னா, தோனி நிலைத்து நின்று விளையாடினால் நல்லது. இவர்கள் விரைவாக வெளியேறினால், அணியின் ரன் வேகம் அப்படியே படுத்து விடுகிறது. ரவிந்திர ஜடேஜா ஆமை வேக ஆட்டத்தை கைவிட்டு அதிரடிக்கு மாற வேண்டும். கடைசி நேரத்தில் டுவைன் பிராவோ கைகொடுப்பது அணிக்கு கூடுதல் பலம். மோகித் அசத்தல்: பவுலிங்கில் வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா, ஹோல்டர், பிராவோ அசத்தலாம். மோரிசுக்கு பதில் ஆல்பி மார்கலுக்கு வாய்ப்பு தரலாம். "ரன் வள்ளல்' அஷ்வினுக்கு சிறிய "பிரேக்' கொடுத்துவிட்டு, ஜகாதியை சேர்க்கலாம். ரவிந்திர ஜடேஜா விக்கெட் வீழ்த்த முயற்சிக்க வேண்டும். துவக்கம் மோசம்: "பிளே ஆப்' வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்ட டில்லி அணி ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கும். சேவக், ஜெயவர்தனா பொறுப்பான துவக்கம் தர வேண்டும். வார்னர், உன்முக்த் சந்த், இர்பான் பதான், ஜாதவ் கைகொடுக்க வேண்டும். உமேஷ் ஆறுதல்: பந்துவீச்சில் இர்பான் பதான் துவகத்திலேயே ரன்களை வாரி வழங்குவதை தவிர்க்க வேண்டும். மார்கல், உமேஷ் யாதவ், அனுபவ அகார்கர் எழுச்சி பெற்றால் சென்னை அணிக்கு தொல்லைதான். சுழலில் நதீம் சாதிக்கலாம். சொந்த மண்ணில் சென்னை அணிக்கு இது தான் கடைசி லீக் போட்டி. எனவே, வெற்றியுடன் விடைபெற முயற்சிக்கும். டில்லி ஆதிக்கம்.... பிரிமியர் கிரிக்கெட் வரலாற்றில் இரு அணிகளும் 11 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் டில்லி அணி 7, சென்னை 4ல் வெற்றி பெற்றுள்ளது. மழை வருமா இன்று போட்டி நடக்கும் சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். வெப்பநிலை குறைந்தபட்சம் 31, அதிகபட்சம் 38 டிகிரி செல்சியஸ் இருக்கும். புயல் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. பெங்களூரு-பஞ்சாப் பலப்பரீட்சை பெங்களூருவில் இன்று நடக்கும் மற்றொரு லீக் போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. பெங்களூரு அணிக்கு கடந்த போட்டியில் சொதப்பிய துவக்க வீரர்களான புஜாரா, கெய்ல் இன்று சிறந்த அடித்தளம் அமைக்க வேண்டும். கேப்டன் கோஹ்லி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். "மிடில் ஆர்டரில்' டிவிலியர்ஸ், ஹென்ரிக்ஸ், திவாரி கைகொடுக்கலாம். பந்துவீச்சில் ராம்பால், வினய் குமார், மிதுன் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். சுழலில் முரளி கார்த்திக் எழுச்சி கண்டால் நல்லது. "பிளே ஆப்' சுற்று வாய்ப்பை இழந்த பஞ்சாப் அணிக்கு மன்தீப் சிங்,கேப்டன் கில்கிறிஸ்ட் பொறுப்பான துவக்கம் கொடுக்க வேண்டும். ஷான் மார்ஷ், பாமர்ஸ்பச், மில்லரின் சிறப்பான ஆட்டம் தொடரலாம். பந்துவீச்சில் பிரவீண் குமார், அவானா, பியுஸ் சாவ்லா, கோனி கைகொடுக்கலாம்.
|