|
சென்னை: கேப்டன் தோனியின் அதிரடி அரைசதம் கைகொடுக்க, சென்னை அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் "பிளே-ஆப்' வாய்ப்பை உறுதி செய்தது. டில்லி அணி ஏமாற்றம் அளித்தது. சென்னையில் நேற்று இரவு நடந்த ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் சென்னை, டில்லி அணிகள் மோதின. "டாஸ்' வென்ற சென்னை கேப்டன் தோனி, "பேட்டிங்' தேர்வு செய்தார். சென்னை அணியில் கிறிஸ் மோரிஸ் இடத்தை, ஆல்பி மார்கல் பிடித்தார். டில்லி அணியில் ஜெயவர்தனா நீக்கப்பட்டு, மெர்வி வாய்ப்பு பெற்றார். நிதான துவக்கம்: சென்னை அணிக்கு மைக்கேல் ஹசி, முரளி விஜய் ஜோடி நிதான துவக்கம் கொடுத்தது. முதல் மூன்று ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை. பின் சுதாரித்த ஹசி, இர்பான் ஓவரில் இரு பவுண்டரி அடித்தார். போத்தா ஓவரில் முரளி விஜய் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்து அமர்க்களப்படுத்தினார். விஜய்(31), ரன் அவுட்டானார். உமேஷ் பந்தில் ஹசி(26) நடையைக் கட்டினார். ரெய்னாவும் (7) அணியை கைவிட்டார். தோனி அதிரடி: பின் தோனி, ரவிந்திர ஜடேஜா சேர்ந்து அசத்தினர். இர்பான், பந்தை சிக்சருக்கு விரட்டினார் தோனி. தொடர்ந்து நெஹ்ரா பந்துவீச்சை பதம் பார்த்த இவர், ஒரு பவுண்டரி, சிக்சர் விளாச, உள்ளூர் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். உமேஷ் "வேகத்தில்' ஜடேஜா (24) போல்டனார். தனது ஆதிக்கத்தை தொடர்ந்த தோனி, கவுல் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். பின் 19வது ஓவரை வீசிய நெஹ்ரா ஓவரிலும் ஒரு சிக்சர், பவுண்டரி விளாசிய இவர், அரைசதம் கடந்தார். சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது. தோனி (58), பிராவோ (12) அவுட்டாகாமல் இருந்தனர். சேவக் "டக்': சவாலான இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு முதல் ஓவரிலேயே "ஷாக்' கொடுத்தார் மோகித் சர்மா. இவரது "வேகத்தில்' சேவக்(0) அவுட்டானார். தொடர்ந்து சென்னை பவுலர்கள் போட்டுத் தாக்க, விக்கெட்டுகள் விரைவாக சரிந்தன. மோகித் சர்மா பந்தில் சிக்சர் அடித்த உன்முக்த் சந்த்(16) அதிக நேரம் நீடிக்கவில்லை. அஷ்வின் வலையில் போத்தா(23) சிக்கினார். ஆல்பி மார்கல் பந்துவீச்சில் ஜாதவ்(2), ரோரர்(4) வெளியேறினர். மெர்வி(14) ஏமாற்றினார். மீண்டும் பந்துவீச வந்த மார்கல் இம்முறை வார்னரை(44) பெவிலியனுக்கு அனுப்ப, நம்பிக்கை தகர்ந்தது. நழுவிய "ஹாட்ரிக்': பிராவோ வீசிய போட்டியின் 18வது ஓவரில் இர்பான்(4), நெஹ்ரா(0) வரிசையாக வெளியேறினர். அடுத்து வந்த கவுல் தடுத்து ஆட, "ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது. டில்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 135 ரன்கள் மட்டும் எடுத்து, இன்னொரு தோல்வியை சந்தித்தது. ஆட்ட நாயகன் விருதை தோனி வென்றார். வெற்றி உற்சாகம் இத்தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று கடைசி போட்டியில் விளையாடிய சென்னை அணியினர், அசத்தல் வெற்றி பெற்றனர். இம்மகிழ்ச்சியில் ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் மைதானத்தை வலம் வந்து ரசிகர்களிடம் பிரியாவிடை பெற்றனர். .
|