|
புதுடில்லி: பிரிமியர் கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கவுள்ள "பிளே-ஆப்' தகுதிச் சுற்றுக்கான முதல் போட்டியில், சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, முதல் அணியாக பைனலுக்கு முன்னேற சென்னை அணி காத்திருக்கிறது. இந்தியாவில், ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லீக் சுற்று முடிந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த சென்னை (22 புள்ளி), மும்பை (22), ராஜஸ்தான் (20), ஐதராபாத் (20) அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. நேரடி வாய்ப்பு: டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடக்கவுள்ள "பிளே-ஆப்' போட்டியில் (தகுதிச் சுற்று-1), சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, மே 26ம் தேதி கோல்கட்டாவில் நடக்கவுள்ள, பைனலுக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி, பைனலுக்கு தகுதி பெற மற்றொரு வாய்ப்பு உள்ளது. ஹசி நம்பிக்கை: சென்னை அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. லீக் சுற்றில் விளையாடிய 15 போட்டியில், 5 அரை சதம் உட்பட 646 ரன்கள் எடுத்துள்ள மைக்கேல் ஹசி, "சூப்பர் பார்மில்' உள்ளார். இவரது ஆட்டம் இன்றும் தொடர்ந்தால், பெரிய ஸ்கோருக்கு அடித்தளம் அமைக்கலாம். இவருக்கு, முரளி விஜய் ஒத்துழைப்பு கொடுத்தால் நல்லது. மூன்றாவது வீரராக களமிறங்கும் சுரேஷ் ரெய்னா (466 ரன், 16 போட்டி) நம்பிக்கை அளிக்கிறார். இக்கட்டான நிலையில், அணியை வெற்றிக்கு அழைத்து செல்லும் கேப்டன் தோனி (398 ரன்) இன்றும் அசத்தலாம். "ஆல்-ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா எழுச்சி காண வேண்டும். கடைசி நேரத்தில் டுவைன் பிராவோ கைகொடுப்பது அணிக்கு கூடுதல் பலம். மோகித் அசத்தல்: வேகப்பந்துவீச்சில் டுவைன் பிராவோ (25 விக்கெட், 16 போட்டி), மோகித் சர்மா (17 விக்கெட், 13 போட்டி) ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். இவர்களுக்கு கிறிஸ் மோரிஸ் (13 விக்கெட், 14 போட்டி) கைகொடுத்தால் வேகத்தின் பலம் அதிகரிக்கும். அதிக ரன் வழங்கிய ஜாசன் ஹோல்டருக்கு பதிலாக மீண்டும் ஆல்பி மார்கல் இடம் பெறலாம். "சுழலில்' அஷ்வின், ரவிந்திர ஜடேஜா எழுச்சி காண வேண்டும். சச்சின் வருவாரா: கடைசி இரண்டு லீக் போட்டிகளில் பங்கேற்காத, மும்பை அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் இன்று களமிறங்கலாம். இதுவரை ஒரே ஒரு அரைசதம் மட்டும் அடித்துள்ள சச்சின் (287 ரன்), எழுச்சி காணும் பட்சத்தில் சிறந்த துவக்கம் கொடுக்கலாம். இவருக்கு டுவைன் ஸ்மித் ஒத்துழைப்பு தந்தால் நல்லது. இதுவரை விளையாடிய 16 போட்டியில் 4 அரைசதம் உட்பட 526 ரன்கள் எடுத்துள்ள கேப்டன் ரோகித் சர்மாவின் ரன் வேட்டை தொடரலாம். "மிடில்-ஆர்டரில்' களமிறங்கும் தினேஷ் கார்த்திக் (456 ரன்), போலார்டு (325 ரன்), அம்பதி ராயுடு ஆகியோர் அதிரடியாக ரன் சேர்க்கும் பட்சத்தில் இமாலய இலக்கை பதிவு செய்யலாம். ஜான்சன் எதிர்பார்ப்பு: வேகப்பந்துவீச்சில் மிட்சல் ஜான்சன் (22 விக்கெட், 14 போட்டி), லசித் மலிங்கா (17 விக்கெட், 14 போட்டி) ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். "சுழலில்' ஹர்பஜன் சிங் (19 விக்கெட், 16 போட்டி) கை கொடுக்கலாம். சமபலத்தில் உள்ள அணிகள் மோத இருப்பதால், இன்றைய போட்டி ரசிகர்களுக்கு சிறந்த விருந்து படைக்கும். வெற்றி தொடருமா பிரிமியர் தொடர் வரலாற்றில் மற்ற அணிகளிடம் 50 சதவீதத்துக்கும் மேல் வெற்றி விகிதம் வைத்திருக்கும் சென்னை அணி, மும்பைக்கு எதிராக சொதப்பி விடுகிறது. இதுவரை இரு அணிகள் மோதிய 13 போட்டியில், 5ல் சென்னை வென்றது. 8ல் தோற்றது. இந்த ஆண்டு மோதிய இரு லீக் போட்டிகளிலும் மும்பை தான் வென்றது. "நாக்-அவுட்' அல்லது "பிளே-ஆப்' என்று வந்து விட்டால் சென்னை அணி அசத்துகிறது. 2010ல் நடந்த பைனலில் சென்னை அணி, மும்பையை வீழ்த்தி கோப்பை வென்றது. கடந்த ஆண்டு நடந்த "எலிமினேட்டர்' போட்டியில், சென்னையிடம் தோற்று, மும்பை வெளியேறியது.
|