|
டெல்லி டேர்டெவில்ஸூக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்.
முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவர்களில் 4விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் திராவிட், ரஹானே ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 17.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டெல்லி அணியில் 6 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இர்ஃபான் பதான் உள்ளிட்ட 6 பேர் நீக்கப்பட்டு மோர்ன் மோர்கல், அஜித் அகர்கர் உள்ளிட்ட 6 வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.
டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் ஜெயவர்த்தனா-சேவாக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 1.4 ஓவர்களில் 19 ரன்கள் சேர்த்தது. சேவாக் 7 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த முரளீதரன் கெüதம் 2, டேவிட் வார்னர் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
ரோஹர் அரை சதம்: இதையடுத்து ஜெயவர்த்தனாவுடன் இணைந்தார் பென் ரோஹர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 31 ரன்கள் சேர்த்தது. 31 பந்துகளைச் சந்தித்த ஜெயவர்த்தனா 34 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கேதார் ஜாதவ் களம்புகுந்தார்.
ரோஹர்-ஜாதவ் ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் டெல்லி சரிவிலிருந்து மீண்டது. அதிரடியாக விளையாடிய ரோஹர் 36 பந்துகளில் அரை சதம் கண்டார். இதனால் அந்த அணி மேலும் விக்கெட்டை இழக்காததோடு, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது.
ரோஹர் 40 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 64, ஜாதவ் 21 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 8 ஓவர்களில் 76 ரன்கள் சேர்த்தது.
முதல் விக்கெட்டுக்கு 108: பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணியில் கேப்டன் திராவிட்-அஜிங்க்ய ரஹானே ஜோடி ஆரம்பத்தில் நிதானமாக ஆடியபோதும், 6-வது ஓவர் முதல் அதிரடியில் இறங்கியது. இதனால் 10 ஓவர்களில் 77 ரன்களை எட்டியது ராஜஸ்தான். தொடர்ந்து வேகமாக விளையாடிய திராவிட், 45 பந்துகளில் அரைசதம் கண்டார்.
இந்த ஐபிஎல் போட்டியில் அவர் அடித்த 4-வது அரைசதம் இது. அவர் 48 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். திராவிட்-ரஹானே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 13.4 ஓவர்களில் 108 ரன்கள் குவித்தது.
இதையடுத்து ஷேன் வாட்சன் களம்புகுந்தார். இதனிடையே ரஹானே 37 பந்துகளில் அரைசதம் கண்டார். மோர்ன் மோர்கல் வீசிய 17-வது ஓவரில் ரஹானே, வாட்சன் ஆகியோர் தலா ஒரு சிக்ஸரை விரட்ட, அடுத்த ஓவரில் இலக்கை எட்டியது ராஜஸ்தான்.
ரஹானே 45 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 63, வாட்சன் 14 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆட்டநாயகன் ரஹானே: 63 ரன்கள் எடுத்த அஜிங்க்ய ரஹானே ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூல் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.
முன்னதாக ரஹானே 4 ரன்களில் இருந்தபோது மோர்கல் பந்துவீச்சில் கொடுத்த கேட்ச்சை பவன் நெகி கோட்டைவிட்டார். அதை சரியாகப் பயன்படுத்திய ரஹானே, ஆட்டநாயகனாகி விட்டார்.
2-வது இடத்தில் ராஜஸ்தான்: இந்த வெற்றியின் மூலம் 8-வது வெற்றியை ருசித்த ராஜஸ்தான், 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. மேலும் ஜெய்ப்பூரில் இதுவரை விளையாடிய 7 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது.
செய்திகள் சில வரிகளில்...
* உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் வாய்ப்பை சென்னைக்கு வழங்கியதற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்வேறு செஸ் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இதையடுத்து சென்னை மற்றும் நார்வேயில் அந்தப் போட்டியை நடத்துமாறு உலக செஸ் சம்மேளனம், இந்தியாவை கேட்டுள்ளது. ஆனால் அதற்கு மறுத்துவிட்ட இந்தியா, நார்வே செஸ் சங்கத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளது.
* ஐசிசி கிரிக்கெட் கவுன்சிலில் வீரர்கள் பிரதிநிதியாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணியில் பிசிசிஐயின் பங்கு இருப்பதாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
* மலேசியாவுக்கு விடுமுறைக்காக சென்றுள்ள இந்திய கால்பந்து அணியின் உதவி பயிற்சியாளரான சேவியா மெடீராவின் பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்து உடைமைகளும் திருடுபோனது.
மாட்ரிட் ஓபன்: 2-வது சுற்றில் சானியா ஜோடி
மாட்ரிட், மே 7: ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-அமெரிக்காவின் பெத்தானியே மடேக் சேன்ட்ஸ் ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
|