Menu Left Menu Right
விளையாட்டு
சச்சின் அதிரடி: மும்பை வெற்றி
Default


மும்பை: சச்சின் 28 பந்தில் 48 ரன்கள் விளாச, மும்பை அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. பவுலிங், பேட்டிங்கில் சொதப்பிய கோல்கட்டா அணியின் "பிளே-ஆப்' வாய்ப்பு அனேகமாக தகர்ந்தது.
மும்பையில் நேற்று இரவு நடந்த பிரிமியர் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் மும்பை, "நடப்பு சாம்பியன்' கோல்கட்டா அணிகள் மோதின. "டாஸ்' வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா, "பேட்டிங்' தேர்வு செய்தார்.
ஒரே ஓவரில் 5 பவுண்டரி:
மும்பை அணிக்கு டுவைன் ஸ்மித், சச்சின் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. அதிரடியாக ஆடிய சச்சின், மெக்லாரன் ஓவரில் தொடர்ந்து ஐந்து பவுண்டரிகள் அடிக்க, ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். ரஜத் பாட்யா பந்தில் சச்சின் (48 ரன், 8 பவுண்டரி) போல்டானார். அப்துல்லா பந்துவீச்சில் ஸ்மித் (47), "பெவிலியன்' திரும்பினார். இதற்கு பின் விக்கெட்டுகள் திடீரென சரிந்தன. மெக்லாரன் வீசிய போட்டியின் 18வது ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மா(16) வெளியேறினார். ஐந்தாவது பந்தில் போலார்டு (4) வீழ்ந்தார். 6வது பந்தில் ராயுடு(0) ரன் அவுட்டானார். ஹர்பஜனும்(0) ரன் அவுட்டானார்.
மெக்லாரன் வீசிய கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். கடைசி பந்தை ஜான்சன் சிக்சருக்கு அனுப்ப, மொத்தம் 25 ரன்கள் எடுக்கப்பட்டன. மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது. கார்த்திக்(34), ஜான்சன்(10) அவுட்டாகாமல் இருந்தனர்.
விக்கெட் மடமட:
கடின இலக்கை விரட்டிய கோல்கட்டா அணி, ஜான்சன் வீசிய முதல் ஓவரிலேயே ஆட்டம் கண்டது. இவரது "வேகத்தில்' கேப்டன் காம்பிர்(0) போல்டானார். அடுத்து வந்தவர்களும் சொதப்பினர். பிரக்யான் ஓஜா "சுழலில்' பிஸ்லா(17), யூசுப் பதான்(13) சிக்கினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த அனுபவ காலிஸ்(24), ஹர்பஜன் பந்தில் அவுட்டாக, நம்பிக்கை தகர்ந்தது. மார்கன்(5) நிலைக்கவில்லை. ஹர்பஜன் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த தேபபிரதா தாஸ்(23), அவரிடமே சரணடைந்தார். "டெயிலெண்டர்களும்' ஏமாற்ற, கோல்கட்டா அணி 18.2 ஓவரில் 105ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வி அடைந்தது.
ஆட்ட நாயகன் விருதை சச்சின் வென்றார்.

அங்கும் மின் தடை
மும்பை அணி "பேட்' செய்த போது, 9வது ஓவரின் முடிவில் வான்கடே மைதானத்தின் ஒரு மின்விளக்கு கோபுரத்தில், மின் தடை காரணமாக பழுது ஏற்பட்டது. இதிலிருந்த விளக்குகள் எரியாததால், போட்டி தடைபட்டது. இப்பிரச்னை சரி செய்யப்பட, 18 நிமிட தாமதத்துக்கு பின் ஆட்டம் துவங்கியது.

மார்கன் கலக்கல் "கேட்ச்'
நேற்று மெக்லாரன் பந்தை மும்பை கேப்டன் ரோகித் சர்மா தூக்கி அடித்தார். இதனை எல்லை கோடு அருகே பிடிக்க முயன்ற கோல்கட்டாவின் மார்கன் நிலை தடுமாறினார். ஆனாலும், சாதுர்யமாக செயல்பட்ட இவர், பந்தை மைதானத்துக்குள் வீசி விட்டு, காலை வெளியே வைத்தார். பின் அதே வேகத்தில் உள்ளே வந்து அருமையாக "கேட்ச்' பிடிக்க, ரோகித் பரிதாபமாக வெளியேற நேர்ந்தது.

"ரன் வள்ளல்' மெக்லாரன்
நேற்று கோல்கட்டா அணியின் ரியான் மெக்லாரன்(தென் ஆப்ரிக்கா) 4 ஓவரில் 60 ரன்களை வாரி வழங்கினார். இதன் மூலம் ஒரே போட்டியில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த வீரர்களின் வரிசையில் மூன்றாவது இடத்தை பெற்றார். முதலிடத்தை வருண் ஆரோன்(டில்லி, 63 ரன், எதிர்- சென்னை, 2012), டிண்டா(63 ரன், எதிர்- மும்பை, 2013) பகிர்ந்து கொண்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் நேசர்(62 ரன், பஞ்சாப், எதிர்-பெங்களூரு) உள்ளார்.

ஷாருக் புறக்கணிப்பு
கடந்த ஆண்டு பாதுகாவலருடன் தகராறு செய்த, கோல்கட்டா அணி உரிமையாளர் ஷாருக்கானுக்கு, மும்பை வான்கடே மைதானத்தில் நுழைய 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதனை நீக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால், தனது நிலையில் உறுதியாக இருந்த மும்பை கிரிக்கெட் சங்கம், ஷாருக்கை அனுமதிக்க கூடாது என மும்பை போலீசுக்கு முறைப்படி கடிதம் அனுப்பியது.
இதையடுத்து சர்ச்சையை தவிர்க்க, நேற்றைய போட்டியை காண ஷாருக் கான் மைதானத்துக்கு நேரில் வரவில்லை. போட்டி துவங்குவதற்கு முன் கோல்கட்டா வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்று வாழ்த்து தெரிவித்தாராம்.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!