|
விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் தனியார் ஆம்புலன்ஸ்களின் அடாவடி காரணமாக, அப்பகுதி மக்கள் அரசின் இலவச ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளனர். விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்கள், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேப்பூர், ராமநத்தம் பகுதியில் நடைபெறும் விபத்துகளில் காயமடைவோர் மற்றும் விருத்தாசலம் ரயில் பாதையில் விபத்தில் சிக்குவோர் ஆகியோருக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனை சிறப்பான சேவை ஆற்றிவருகிறது. மேலும், மருத்துவமனையில் இறப்போர்களுக்கு இங்கேயே பிரேத பரிசோதனையும் செய்யப்படுகிறது. இதற்காக, அரசின் 108 ஆம்புலன்ஸ் மற்றும் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல இலவச அமரர் ஊர்தியும் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், விபத்து நடக்கும் போது, சில தனியார் ஆம்புலன்ஸ்கள், அரசு ஆம்புலன்ஸ்களுக்கு முன்பாக சம்பவ இடத்திற்குச் சென்று அடாவடி வசூலில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதற்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் சில ஊழியர்கள் உடந்தையாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் அரசின் இலவச ஆம்புலன்ஸ் சேவையை விருத்தாசலம் பகுதி மக்கள் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
|