Menu Left Menu Right
வேளாண்மை
பந்தல் செலவு பயம் போச்... தள தள தரை பீர்க்கு!
Default

வழக்கமான பயிர்களை சாகுபடி செய்தால் போட்ட முதலை எடுப்பதற்குக் கூட வருமானம் கிடைப்பதில்லை. இதிலிருந்து மாறுதல் பெறத்தான் காய்கறிகளுக்கு மாறினார்கள் விவசாயிகள். ஆனால், சில காய்கறிகளைப் பயிரிட பந்தல் அமைக்க வேண்டுமே! அதற்கென்று ஒரு பெரிய தொகையையல்லவா செலவு செய்ய வேண்டியதிருக்கிறதே! என்ற புலம்பலோடு காய்கறிப் பயிரென்றால் ஆளைவிடு சாமி என்று சொல்லும் நிலைக்கு வந்து விட்டார்கள். ஆனால், இப்போது பந்தல் பயம் தேவையில்லை. பந்தலில் பயிர் செய்ய வேண்டிய காய்கறிப் பயிர்களை தரையிலேயே பயிர் செய்யலாம் என்ற நிலை வந்து விட்டது. இந்த வகையில் பந்தலில் செய்யக்கூடிய பீர்க்கு சாகுபடியை தரையில் செய்து அசத்தும் ரா.ராஜா (த/பெ. ராஜமாணிக்கம், இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் எதிரில், ஆலத்தூர் கேட் அஞ்சல், குன்னம் வட்டம், பெரம்பலூர் மாவட்டம் 621 109. செல்: 94861 59926) என்பவரைச் சந்தித்தோம்.

"சமீபத்தில் பந்தல் இல்லாமல் பீர்க்கைப் பயிரிடலாம் என்று நண்பர்கள் மூலம் அறிந்தேன். இது ஆன்றாக இருக்கிறதே, நாமும் செய்து பார்க்கலாம் என்று முடிவெடுத்து எனது அரை ஏக்கர் நிலத்தில் பயிர் செய்ய இறங்கி விட்டேன். இன்று நல்ல விளைச்சலைத் தந்து கொண்டிருக்கிறது' என்றவர், அதன் சாகுபடி முறை பற்றி கூறுகிறார்.
"தரையில் பீர்க்கைப் பயிரிட முதலில் நிலத்தை நன்றாக இரண்டு முறை உழவு செய்வோம். இதற்கு நாங்கள் தொழுவுரம் போடவில்லை. உழவு செய்த பின்பு நான்கு அடி இடைவெளிகளில் ஓரடி அகலமுள்ள வாய்க்கால்களை அமைப்போம். வாய்க்கால்களின் இரண்டு பக்க கரையோரங்களிலும் ஒரு மீட்டருக்கு இடையில் ஒரு விதை என ஊன்றுவோம். அரை ஏக்கருக்கு 400 கிராம் விதை தேவைப்பட்டது. விதைப்பதற்கு தேவையான வீரிய ரக விதையை பெரம்பலூரிலிருந்து வாங்கி வந்தோம். பாசனம் செய்து அந்த ஈரத்தில்தான் விதை ஊன்றுவோம். விதை ஊன்றிய பிறகு வாரத்திற்கு இருமுறை பாசனம் செய்வோம்.

ஐந்தாவது நாளில் விதை முளைத்து வந்து விடும். இருபதாவது நாளில் ஒருமுறை களையெடுப்போம். பின்பு களையிருப்பதைப் பொறுத்து அகற்றுவோம். 35வது நாளில் செடியிலிருந்து பூ வர ஆரம்பிக்கும். இதிலிருந்து ஒரு 10 நாள் கழித்து அதாவது விதை ஊன்றிய 45வது நாளில் 10 கிலோ டி.ஏ.பி., 5 கிலோ யூரியா, 2 கிலோ சல்பேட் ஆகியவற்றைக் கலந்து செடியைச் சுற்றி இடுவோம். உரமிட்டவுடன் நீர்ப் பாய்ச்சி விடுவோம். உரமிட்ட மறுநாளில் டைசர் மருந்தை டேங்குக்கு 10 மிலி என்ற அளவில் கலந்து தெளிப்போம்.

50வது நாளிலிருந்து அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம். அதிலிருந்து 3 நாளைக்கு ஒரு அறுவடை என 125வது நாள் வரை தொடர்ந்து மேற்கொள்வோம். 60வது நாளில் முன்பு சொன்ன உரங்களை அதே அளவில் கலந்து இடுவோம். உரமிட்ட மறுநாளில் முன்பு சொன்ன மருந்தையே தெளிப்போம். எங்கள் நிலத்திற்குப் பக்கத்தில் வேறு யாரும் சாகுபடி செய்யவில்லை என்பதால் பெரும்பாலும் எந்த விதமான பூச்சிகளும் தாக்குவதில்லை. அப்படி ஏதாவது தாக்கினால் வேப்பங்கொட்டைச் சாறை தண்ணீரில் கலந்து தெளித்து விடுவோம்.

50வது நாள் முதல் 125வது நாள் வரை மொத்தம் 25 அறுவடையை மேற்கொள்ளலாம். ஒரு அறுவடையில் 25 கிலோ முதல் 40 கிலோ வரை காய்கள் மகசூலாகக் கிடைக்கும். ஒவ்வொரு முறை அறுவடை செய்யும்போதும் சராசரியாக 30 கிலோ காய்கள் மகசூலாகக் கிடைத்து விடுகிறது.

இந்த அரை ஏக்கர் நிலத்திலிருந்து மொத்தமாக செய்யும் 25 அறுவடையிலிருந்து சராசரியாக 750 கிலோ மகசூல் கிடைத்து விடுகிறது. அறுவடை செய்யும் காய்களை பெரம்பலூருக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து விடுகிறோம். அங்கு ஒரு கிலோ காய்க்கு 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலையாகக் கிடைக்கிறது. எப்படியும் ஒரு கிலோ காய்க்கு கமிஷனெல்லாம் போக சராசரியாக 10 ரூபாய் விலை கிடைக்கிறது. இதன்மூலம் அரை ஏக்கரிலிருந்து 125 நாளுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் வருமானமாகக் கிடைக்கிறது. இதற்கு பராமரிப்பு செய்வதற்காக 3 ஆயிரத்து 440 ரூபாய் செலவாகிறது. இதுபோக 4 ஆயிரத்து 60 ரூபாய் நிகர லாபமாகக் கிடைக்கிறது" என்கிறார்.

பீர்க்கு வரவுசெலவு கணக்கு
(அரை ஏக்கர்/125 நாட்களுக்கு)

செலவு வரவு

உழவு ரூ.1,000
பாத்தியமைக்க ரூ.200
விதை ரூ.400
உரம் ரூ.300
மருந்து ரூ.540
களை ரூ.1,000
மொத்த செலவு ரூ.3,440
வருமானம் ரூ.7,500
(750 கிலோ x ரூ.10)
நிகர லாபம் ரூ.4,060

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!