Menu Left Menu Right
தமிழக செய்திகள்
மௌலிவாக்கம் கட்டடம் இடிந்த சம்பவம்
Default



சென்னை அருகே மௌலிவாக்கத்தில் கட்டடம் இடிந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க, நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கட்டடம் இடிந்த சம்பவத்துக்குக் காரணமான அனைத்து அம்சங்கள் உள்பட மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து விசாரணை ஆணையம் விசாரித்து அரசுக்கு அறிக்கை தரும் என்றும் அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு:

சென்னையை அடுத்த மௌலிவாக்கத்தில் பிரைம் சிருஷ்டி நிறுவனத்தால் கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டடம் கடந்த சனிக்கிழமையன்று இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்டெடுப்பது, காயமடைந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதுவரை 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் துயர சம்பவத்தில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். இந்தச் சம்பவத்தில் பலியானவர்களுக்கு நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளன.

கட்டடம் இடிந்து விழுந்த இடத்தை ஞாயிற்றுக்கிழமையன்று நேரில் பார்வையிட்டு, அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்தத் துயரச் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ஒரு நபர் விசாரணை ஆணையம்: கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் நடைபெற்றதற்கான காரணம் குறித்தும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயவும் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைக்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விசாரணை ஆணையம், கட்டடம் இடிந்து விழுந்ததன் விளைவாக பலர் உயிரிழந்தது மற்றும் பலர் படுகாயமடைந்த துயரச் சம்பவத்துக்கு காரணமான அம்சங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து ஆராயும். மேலும், பல கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழப்பதற்கும், படுகாயம் அடைந்ததற்கும் காரணமான இந்தச் சம்பவம் யாருடைய அலட்சியப் போக்கால் நடந்தது என்பதைக் கண்டறிந்து, அதற்குப் பொறுப்பானவர்களை ஆணையம் முடிவு செய்யும்.

வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில், தடுப்பதற்கான தீர்வு முறைகளையும் பரிந்துரை செய்யும். இந்த அம்சங்களை ஆய்வு செய்து அரசுக்கு ஆணையம் அறிக்கையினை அளிக்கும். விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் எனது தலைமையிலான அரசு நடவடிக்கைகளை எடுக்கும் என்று தனது உத்தரவில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!