Menu Left Menu Right
தமிழக செய்திகள்
தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டம்
Default

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய சிங்கப்பூர் அமைச்சர் கே.சண்முகம்.

தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டத்தை நிறைவேற்ற ஆதரவு தர வேண்டும் என்று சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் கே.சண்முகத்திடம் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார்.

சிங்கப்பூர் நாட்டின் வெளியுறவு மற்றும் சட்டத் துறை அமைச்சர் கே.சண்முகம், முதல்வர் ஜெயலலிதாவை சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்ட முக்கிய விஷயங்கள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட தகவல்:

தமிழகம் மற்றும் சிங்கப்பூர் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகள் குறித்து அந்த நாட்டின் அமைச்சரின் கவனத்துக்கு முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். கலாசார மற்றும் மொழியியல் ரீதியாக இருநாடுகளுக்கும் இடையேயுள்ள தொடர்புகள் பற்றிக் குறிப்பிட்ட முதல்வர், பொருளாதார உறவுகளில் இரு தரப்பும் முழுவீச்சில் செயல்படுவது குறித்து எடுத்துரைத்தார்.

கிழக்கு ஆசியா, கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் அதிக அளவு முதலீடு செய்யும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது என முதல்வர் தெரிவித்தார்.

தொலைநோக்குத் திட்டம் 2023: தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதற்காக தொலைநோக்குத் திட்டம் 2023 வகுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திலுள்ள அம்சங்களைச் செயல்படுத்த ரூ.15 லட்சம் கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில், 217 திட்டங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. மாநில அரசு வகுத்துள்ள தொலைநோக்குத் திட்டத்தைச் செயல்படுத்த அதிக அளவிலான முதலீடுகளை சிங்கப்பூர் அரசு அளிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நிதி நகரம் அமைப்பது போன்ற திட்டங்களைச் செயல்படுத்த சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்தவர்களின் அனுபவமும், ஆற்றலும் அவசியமாகும். மேலும், தொழில் பூங்காக்கள் மேம்பாடு, மதுரை-தூத்துக்குடி தொழில் வளச் சாலை, தமிழக கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களை மேம்படுத்துவது, நகர்ப்புற உள்கட்டமைப்பு, கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை, கடல்நீரை நன்னீராக்கும் திட்டம், சுற்றுலா தொடர்பான திட்டங்கள் ஆகியவற்றில் சிங்கப்பூரின் ஒத்துழைப்பு அவசியமாகும் எனக் குறிப்பிட்ட முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தை வளப்படுத்தும் பல்வேறு திட்டங்கள் அடங்கிய தொலைநோக்குத் திட்டம் 2023-ஐ செயல்படுத்துவதற்கான சிறப்பான பங்குதாரராக சிங்கப்பூர் விளங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஆரம்ப சுகாதாரப் பிரிவை மேம்படுத்துவதில் தமிழக அரசு தீவிர முனைப்புக் காட்டி வருவதாகவும், இதற்கு சிங்கப்பூரின் ஒத்துழைப்பு மிகவும் தேவை என்றும் வலியுறுத்தினார். மேலும், மாநிலத்தில் குடி தண்ணீரின் தேவை அதிக அளவு உள்ளது. இந்தச் சூழ்நிலையில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அவசியமாக உள்ளது. மாநிலத்தில் அதிக அளவிலான கடல் நீரை குடிநீராக்கும் மையங்களை ஏற்படுத்த சிங்கப்பூரின் உதவி தேவையாக இருக்கிறது என முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் அமைச்சர் பாராட்டு: முதல்வர் ஜெயலலிதாவின் கருத்துகளை ஏற்றுக் கொண்ட சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம், இந்தியாவில் முதலீடுகளைச் செய்வதற்கான மூன்று சிறப்பான இடங்களில் தமிழகமும் ஒன்றாகத் திகழ்கிறது என பாராட்டுத் தெரிவித்தார். மிகச்சிறப்பான உற்பத்தித் தளமாக தமிழகம் விளங்கி வருவது போன்று, மிகச்சிறந்த முதலீட்டு மையமாக சிங்கப்பூர் திகழ்வதாக அவர் குறிப்பிட்டார். முதல்வர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட முறையிலான தொலைநோக்குப் பார்வையும் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக அமைச்சர் சண்முகம் பாராட்டினார்.

அசன்டாஸ் நகரம் உருவாக்குவது போன்ற தமிழகத்தில் பல்வேறு மிகப்பெரிய முதலீடுத் திட்டங்களை சிங்கப்பூர் ஏற்கெனவே செய்து வருகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர். மேலும், எந்தெந்தத் துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்த யோசனைகளை வழங்கிய முதல்வருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையும், இந்தியாவில் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள சூழலும், அதிக அளவிலான சிங்கப்பூர் முதலீடுகளை தமிழகத்தில் செய்வதற்கு சாதகமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளன என்றார் சண்முகம். மேலும், முதல்வர் ஜெயலலிதா தங்கள் நாட்டுக்கு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், பி.தங்கமணி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!