பெருந்துறை: பொது நச்சுக் கழிவு மேலாண்மை திட்டத்தை கைவிடக்கோரி, சட்டப்பேரவை உறுதிமொழிக்குழுவிடம் மனுக்கள் குவிந்தன. பெருந்துறை வந்த குழுவினரிடம், காங்கேயம் எம்.எல்.ஏ., விடியல் சேகர் கூறுகையில், ""பெருந்துறை "சிப்காட்' ஆலைகள் 10 ஆண்டுகளாக சாயக்கழிவு நீரை, விதிமுறைகளை மீறி, நிலத்தில் விட்டு, நிலத்தடி நீரை மாசுபடுத்தி விட்டன. எட்டு மாவட்டத்தின் ஆலைக்கழிவை கொண்டு வந்து, "சிப்காட்'ல் கொட்டுவதாக கூறுகின்றனர். திட்டத்தை நிறைவேற்றும் தனியார் துறையினரே, அதை, "அபாயகரமான பொது நச்சுக் கழிவு' என்று கூறுகின்றனர்,'' என்றார்.
மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., பழனிசாமி கூறுகையில், ""இதுபோன்ற திட்டத்தை எதிர்த்து, சென்னை கும்மிடிப்பூண்டி மக்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். பெருந்துறை "சிப்காட்'ல் 13 வகை ஆலைக் கழிவுகளை கொட்டுவதாக கூறுகின்றனர். அதனால், சுற்றுச்சூழலும், மக்களும் பாதிக்கப்படுவர்,'' என்றார்.
பெருந்துறை எம்.எல்.ஏ., பொன்னுதுரை கூறுகையில், ""இத்திட்ட அறிக்கையில், சுற்றியுள்ள கிராமங்களை பற்றிய விபரம் மறைக்கப்பட்டுள்ளது. 2007ல் இதற்கான "சர்வே' நடத்தப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட நிலத்தடி நீரின் தன்மைக்கும், இன்றைய தன்மைக்கும் ஏராளமான வேறுபாடு உண்டு. இப்போது, நிலத்தடி நீர் பல மடங்கு கெட்டு விட்டது. இப்பகுதியிலுள்ள பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், குடியிருப்புகள், காஸ் நிரப்பும் ஆலை அனைத்தும் திட்ட அறிக்கையில் மறைக்கப்பட்டுள்ளது. பல உண்மைகளை மறைத்து, பொய்யான தகவலை, அரசுக்கு கொடுத்துள்ளனர்,'' என்றார். அனைத்து கட்சிகள் சார்பில், பொது நச்சுக் கழிவு மேலாண்மை திட்டத்தை கைவிட அரசுக்கு பரிந்துரைக் கோரி குழுவிடம் மனு அளிக்கப்பட்டது.
ஈங்கூர் பஞ்சாயத்து தலைவர் நடராஜமூர்த்தி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: "சிப்காட்' கழிவு நீரால், ஈங்கூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 18 கிராமங்கள் பாதிப்படைந்துள்ளன. இப்பகுதி மக்கள் பாதுகாப்பான நீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். நோய்களின் தாக்கம் அதிகமாகிவிட்டது. புதிதாக நச்சுக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தினால், இப்பகுதியை சுற்றி 15 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு காற்று, நிலம், நீர், விவசாயம் மாசுபட்டு, இப்பகுதியில் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுவிடும். விவசாயம் முற்றிலும் அழிந்துபோகும். இத்திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும். சிப்காட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் தங்கள் கழிவுகளை முறைப்படி சுத்திகரித்து வெளியேற்றவும், குடிநீர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசு தேவையான அளவு சுத்தமான குடிநீர் வழங்கவும் வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
|