| இலங்கையில் நடைபெறும் இந்திப்பட சூட்டிங்கில் பங்கேற்ற நடிகை அசின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் பட சூட்டிங்கை இலங்கையில் நடத்தக் கூடாது என்றும், தமிழ் நடிகர் - நடிகைகள் யாரும் படப்பிடிப்புக்காக இலங்கை செல்லக் கூடாது என்றும் பிலிம்சேம்பர், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஒருமித்த முடிவெடுத்தன.
இந்த கூட்டமைப்பின் முடிவுக்கு எதிராக நடிகை அசின் இலங்கை சென்றிருக்கிறார். பாலிவுட் நடிகர் சல்மான்கான் நாயகனாக நடிக்கும் ரெடி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக அசின் நடிக்கிறார். இப்படத்தின் சூட்டிங்கிற்காகத்தான் அசின் இலங்கை சென்றுள்ளார். அசின் இலங்கை சென்ற விவகாரம் தமிழ் திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடையை மீறி இலங்கை சென்ற அசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்ப்பு குரல் வலுத்து வருகிறது. தற்போது அவர் விஜய் ஜோடியாக நடித்து வரும் காவல்காரன் படத்தில் அசின் தொடர்ந்து நடிக்கக் கூடாது என்றும் ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் அசின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதில் அளித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், `கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை அசின் மீறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி கூட்டமைப்புடன் கலந்து பேசி முடிவு செய்வோம்' என்று கூறியுள்ளனர். |