தானே : மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, சுவர்கள் இடிந்து விழுந்து, ஆறு பெண்கள் உட்பட ஒன்பது பேர் பலியாயினர்; நான்கு பேர் படுகாயமடைந்தனர். மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமின்றி, சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், மும்பையிலும், அதையொட்டிய பகுதிகளிலும் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாதர், காட்பரி ஜங்ஷன் உள்ளிட்ட பல ரயில் நிலையங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தண்டவாளங்கள் எல்லாம் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், பெரும்பாலான ரயில்கள், சரியான நேரத்திற்கு இயங்கவில்லை.
மும்பை விமான நிலைய ஓடுபாதையிலும், வெள்ள நீர் புகுந்துள்ளதால், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஐந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தானே மாவட்டம் தியானேஷ்வர் நகரில், கட்டுமான நிறுவனம் ஒன்று புதிதாக கட்டியிருந்த சுற்றுச் சுவர், மழையின் காரணமாக நேற்று அதிகாலை இடிந்து, அருகிலிருந்த குடிசைகள் மீது விழுந்தது. இதில், 12க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர். இவர்களில் எட்டுப் பேர் பலியாகி விட்டனர். நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இறந்தவர்களில் ஆறு பேர் பெண்கள்.
இதுபற்றி தானே மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ""இடிந்து விழுந்த சுற்றுச் சுவர் 80 அடி நீளம் கொண்டது. இடிந்து விழுந்தது போக, மீதமுள்ள சுவர்கள், மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக மாநகராட்சி ஊழியர்களால் இடித்துத் தள்ளப்பட்டன,'' என்றனர். இடிந்து விழுந்த சுவரின் அருகில், ஏராளமான அளவுக்கு மண்ணை, கட்டுமான நிறுவனம் குவித்து வைத்திருந்ததே, சுவர் இடிந்து விழ காரணம் என, அதனருகில் வசித்தவர்கள் தெரிவித்தனர். மும்பையின் மற்றொரு புறநகர்ப் பகுதியிலும், இதேபோல் சுவர் இடிந்து விழுந்ததில், ஒருவர் பலியானார். கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சாந்தாகுரூசில் 9.5 செ.மீ., மழையும், கொலாபாவில் 7.9 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர். மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு, நகரின் பல பகுதிகளில், இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவிலும் மழை: ஆந்திராவின் கடலோர பகுதிகளிலும், தெலுங்கானா, ராயலசீமா பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. சில இடங்களில், இடியுடன் கூடிய மழையும் பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக காலேஸ்வரத்தில் 5 செ.மீ., மழையும், பாபட்லாவில் 4 செ.மீ., மழையும் பதிவானதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர். |