திருச்சூர் : ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி, நாட்டில் முதன் முறையாக கோவில் அர்ச்சகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கல்வியில் முதலிடத்தில் இருக்கும் கேரளா, கோவில் அர்ச்சகர்களாக பெண்களைத் தேர்ந்தெடுப்பதில் வழிகாட்டியுள்ளது. கேரளாவில் உள்ள கோவில்களில், "தந்திரி' (அர்ச்சகர்) களாக ஆண்கள்தான் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு, இந்துமத சாஸ்திரங்களிலும், ஆகமங்களிலும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இரிஞ்ஞாலக்குடாவிலுள்ள தரனநெல்லூர் மடம் மற்றும் ஆலப்புழை மாவட்டத்தின் செங்கண்ணூரிலுள்ள தாழமோன் மடம் ஆகிய, இரண்டு, "தந்திரி' பயிற்சிப் பள்ளிகள் கேரளாவில் புகழ்பெற்றவை. இவற்றில் தரனநெல்லூர் மடத்தைச் சேர்ந்த பத்மநாபன் நம்பூதிரிபாடு என்பவரின் மகள் ஜ்யோத்ஸ்னா நம்பூதிரிபாடு(11) என்ற சிறுமிதான், முதன் முறையாக நாட்டில் பெண் அர்ச்சகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
திருச்சூர் மாவட்டம் காட்டூரில், பத்மநாபனின், தரனநெல்லூர் வீட்டுக்குச் சொந்தமான பயிங்கன்னிக்காவு என்ற துர்கா கோவிலில், சிறுமி ஜ்யோத்ஸ்னா அர்ச்சகராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அக்கோவில் மூலஸ்தானத்தில் துர்கா தேவியின் விக்ரக பிரதிஷ்டையை தன் குரு முன்னிலையில், சிறுமி செம்மையாக நடத்தி வைத்தார். பின், அதற்கான மண்டல பூஜைகளையும் நடத்தி வருகிறார்.
சிறுமியின் சிறுவயது முதலே, பூஜை முறைகளைக் கற்றுக் கொடுத்து வந்திருக்கிறார் பத்மநாபன். அவருக்கு மந்திர அதிகாரத்துக்கான "மந்திர தீட்சை' அளித்து, பின், ஆகம பூஜைகளைக் கற்றுக் கொள்வதற்கான "கர்ம தீட்சை'யும் அளித்துள்ளார். "தந்த்ர (ஆகம) பூஜைகளைப் பெண்கள் செய்யக் கூடாது என்று சாஸ்திரம் விதிக்கவில்லை. தந்த்ரங்களைக் கற்றவர் யாராயினும், "தந்திரி' ஆகலாம். ஆனால், நாம் அதைப் பற்றி சிந்திப்பதில்லை. அத்துறையில் ஆண் அர்ச்சகர்களின் ஆதிக்கம் மிகுந்திருப்பதுதான் இதற்குக் காரணம்' என்கிறார் பத்மநாபன்.
"ஆகமங்களைக் கற்பதில் நான் ஆர்வம் கொண்டிருக்கிறேன். என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கற்பேன்' என்று உற்சாகத்துடன் கூறுகிறார் ஜ்யோத்ஸ்னா. துர்கா தேவிக்கு ஆகம விதிப்படி, பிரம்மகலச அபிஷேகம், பரிகலச அபிஷேகம் ஆகியவற்றைச் செய்து முடித்தபின், பக்தர்களுக்கு அவர் பிரசாதம் வழங்கினார். அவரது பெற்றோர் அவரது காலில் விழுந்து வணங்கினர்.
தரனநெல்லூர் மடம், மத்திய கேரளாவின் இரிஞ்ஞாலக்குடாவிலுள்ள கூடல் மாணிக்கம், திருப்பிறையாற்றிலுள்ள ராமர் கோவில் ஆகியவற்றிலும் "தந்திரி'களை நியமித்துள்ளனர். |