ஜோகனஸ்பார்க்: உலக கோப்பை கால்பந்தில் இன்றைய லீக் போட்டியில், உலகின் "நம்பர்-1' அணியான பிரேசில், வட கொரியாவை சந்திக்கிறது. இதில், பிரேசில் அசத்தலான வெற்றியைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஜோகனஸ்பர்க், எல்லீஸ் பார்க் மைதானத்தில் இன்று இரவு நடக்கும் "ஜி' பிரிவு போட்டியில், வலிமையான பிரேசில் அணி, தரவரிசையில் 105 வது இடத்திலுள்ள, பலவீனமான வட கொரியா அணியை சந்திக்கிறது.
உலக கோப்பை வரலாற்றில் ஐந்து முறை கோப்பை வென்று சாதித்துள்ள அணி பிரேசில். கடந்த தொடரில் ஐந்தாவது இடம் பெற்ற இந்த அணி, ஆறாவது முறையாக கோப்பை வெல்ல, ஆப்ரிக்க மண்ணில் களமிறங்கியுள்ளது. இதற்கேற்ப, பயிற்சி ஆட்டங்களில் ஜிம்பாப்வே (3-0), தான்சானியா (5-1) அணிகளை அதிக கோல் வித்தியாசத்தில் வென்ற உற்சாகத்தில் இன்று களமிறங்குகிறது.
காகா பலம்: சீனியர் வீரர் கார்லஸ் துங்காவின் பயிற்சியில் ஏற்கனவே கோபா அமெரிக்கா, கான்பெடரேஷன் கோப்பை வென்றுள்ளது. ரோனால்டோ, ரொனால்டினோ, ரிவால்டோ என மூன்று "ஆர்' இல்லாத நிலையில் அணி காகா, லூயிஸ் பேபியானோ, ராபின்ஹோ மற்றும் மைகான் போன்ற முன்னணி வீரர்கள் கைகொடுக்கத் தயாராக உள்ளனர். இவர்களுடன் "சூப்பர்' கோல் கீப்பர் ஜூலியோ சீசர் எவ்வித தாக்குதலையும் தடுப்பதில் வல்லவர்.
இவர்களது அபார ஆட்டத்தில் பிரேசில் அணி எளிதாக வெற்றி பெறும் என்பது உறுதி.
சமாளிப்பார்களா?
வட கொரிய அணியை பொறுத்தவரையில், இரண்டாவது முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்கிறது. முதன் முறையாக கடந்த 1966ல் பங்கேற்ற போது, எதிரணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து காலிறுதி வரை முன்னேறியுள்ளது. அடுத்து 44 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆச்சர்யம் கொடுக்க முயற்சிக்கலாம். ஆனால் நைஜீரியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தோல்வியடைந்து ஏமாற்றத்தில் <உள்ளது.
இருப்பினும் இந்த அணிக்கு அன் கோல் ஹியாக், கேப்டன் ஹாங் யாங்-ஜோ, ஜோயி ஹும் ஆகிய முன்கள ஆட்டக்காரர்கள் அணியை காப்பாற்றுவார்கள் என நம்பப்படுகிறது.
போர்ச்சுகல்-ஐவரி கோஸ்ட் பலப்பரீட்சை
போர்ட் எலிசபெத்: உலக கோப்பை லீக் போட்டியில் இன்று நடக்கும் மற்றொரு போட்டியில் போர்ச்சுகல், ஜவரி கோஸ்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தென் ஆப்ரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில், நெல்சன் மண்டேலா மைதானத்தில், இன்று "ஜி' பிரிவில் தரவரிசையில் 3வது இடத்திலுள்ள போர்ச்சுகல் அணி, 26வது இடத்தில் இருக்கும் ஐவரி கோஸ்ட் அணியை சந்திக்கிறது.
ஐந்தாவது முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் போர்ச்சுகல் அணி, மிக வேகமாக வளர்ச்சியடைந்த அணி எனலாம். கடந்த தொடரில் நான்காவது இடம்பிடித்த இந்த அணி, இம்முறை கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையில் அசத்தும் என நம்பலாம். பயிற்சி போட்டியில் காமரூன் (3-1), மொஜாம்பிக் (3-0) அணிகளை வென்றுள்ளது.
இந்த அணிக்கு முன்னணி வீரர் நானி காயத்தால் பங்கேற்காத நிலையிலும் லைய்டுசன், டேனி, சிமாவோ சபரோசா, ஹியுகோ அல்மெய்டா ஆகியோர் வெற்றிக்கு கைகொடுக்கலாம். போட்டி குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறுகையில்,"" இன்றைய முதல் போட்டியின் வெற்றி எங்களுக்கு முக்கியமானவை. இதற்கேற்ப எங்கள் அணி சிறப்பாக விளையாடும் என நம்புகிறேன்,'' என்றார்.
பலவீனமாக அணி: கடந்த தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறி இந்த அணி, இரண்டாவது முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்கிறது. ஆப்ரிக்க மக்களின் ஆதரவுடன் களமிறங்கும் ஐவரி கோஸ்டுக்கு நடுகள ஆட்டக்காரர் ஜெய்க் டியோட்டி, ஜீன் ஜாக்குஸ் கோசோ, ரொமாரிக், சலோமோன் காலு, அருனா டின்டனே போன்றவர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றிக்கு முயற்சிக்கலாம்.
---------
வெல்வது யார்?
ரஸ்டன் பர்க்: இன்று மாலை நடக்கும் முதல் போட்டியில் நியூசிலாந்து, சுலோவேகியா அணிகள் மோதுகின்றன.
ஒன்பதாவது முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் சுலோவேகியா, தரவரிசையில் 34வது இடத்தில் உள்ளது. இந்த அனுபவத்தில் இன்று நியூசிலாந்தை வென்று, புள்ளிக்கணக்கை துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஸ்டானிஸ்லவ் செஸ்டக், ராபர்ட் விட்டேக், மார்டின் ஜக்குப்கோ, விளாடிமிர் வெசிஸ் உதவலாம்.
ஆனால் இரண்டாவது முறையாக இத்தொடரில் பங்கேற்றுள்ள நியூசிலாந்து அணி, உலக கோப்பை தொடரில் இதுவரை எந்த போட்டியிலும் வெற்றி பெற்றதில்லை. இதனால் முதல் வெற்றியை பதிவு செய்ய முயற்சிப்பது உறுதி. பயிற்சி போட்டிகளில் சிலி மற்றும் செர்பிய அணிகளை வென்ற உற்சாகத்தில் களமிறங்கும் இந்த அணிக்கு கேப்டன் ரேயான் நெல்சன், கிறிஸ் கில்லன், கிறிஸ் உட், டேவிட் முல்லிகன், ஜெரீமி கிறிஸ்டியே போன்றவர்கள் கைகொடுக்கலாம்.
|