நாட்டிங்ஹாம்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், மார்கன் சதமடித்து கைகொடுக்க, இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது.
இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாட்டிங்ஹாமில் நேற்று துவங்கியது. "டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ், பேட்டிங் தேர்வு செய்தார்.
ஆமிர் துல்லியம்:முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு அலெஸ்டர் குக் (8), ஆமிர் வேகத்தில் வெளியேறி ஏமாற்றினார். மறுமுனையில் பொறுப்பாக ஆடிய கேப்டன் ஸ்டிராஸ் (45), அரைசதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். அடுத்து வந்த கெவின் பீட்டர்சன் (9), ஆசிப் வேகத்தில் போல்டானார். பின்னர் நிதானமாக ஆடிய டிராட் (38), ஆமிர் வேகத்தில் எல்.பி.டபிள்யு., முறையில் அவுட்டானார். இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்து திணறியது.
சூப்பர் ஜோடி:இந்நிலையில் இணைந்த மார்கன்-கோலிங்வுட் ஜோடி, பாகிஸ்தான் பந்துவீச்சை எளிதாக சமாளித்து, அணியை சரிவிலிருந்து மீட்டது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கன், டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதமடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த கோலிங்வுட், டெஸ்ட் அரங்கில் தனது 20வது அரைசதமடித்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 331 ரன்கள் எடுத்திருந்தது. மார்கன் (125), கோலிங்வுட் (81) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் முகமது ஆமிர் 3, முகமது ஆசிப் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
|